உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
சங்கீதம் 119:165
ஓ ! வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார்! இந்த ஆசீர்வாதம் எப்படி பலிக்கும் என்பதை தியானிபதற்கு முன்பாக, இப்பதிவில் வேதத்தை எப்படி நேசிப்பது என்பதை தியானிக்கலாம்.
நாம் எதை அதிகமாக நேசிக்கிறோமோ அதற்கு மிகுந்த தியாகத்தையும், முக்கியத் -துவத்தையும், நேரத்தையும் செலவிடுவோம். எடுத்துக்காட்டாக, வரைபட கலைஞர்களும் புத்தகப் விரும்பிகளும் எவ்வளவு நேரமானாலும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதை முடிக்கிற வரையில் அதற்குள் மூழ்கி விடுவார்.எப்படி அவர்களால் மணிக்கணக்காக ஒரே இடத்தில் அமர்ந்து அதை செய்ய முடிகிறது.அவர்களுக்குள் இருக்கும் வாஞ்சை தான் காரணம்! எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நாம் நேசிக்கின்ற பிள்ளைகளோடு நேரத்தை கண்டுபிடித்து செலவிடுவதை நாம் தவற விடுவதே இல்லை. அதேபோல், வேதத்தை நேசித்தோமேயானால் அதை வாசிக்கவும் தியானிக்கவும் தரமான தாராளமான நேரத்தை செலவிடுவோம். அநேக கிறிஸ்தவர்கள் வேதத்தின் முக்கியத்து -வத்தை அறிந்திருந்தாலும் ஏன் அவர்களால் ஆர்வம்(interest) காட்ட முடியாமல் போகிறது?
வேதத்தை நேசிக்க முடியாத சில காரணங்கள்-
- சிலருக்கு அது புரிந்துகொள்வதற்கு கடின புத்தகமாக காணப்படுகிறது
- வேறு சிலர் அதை சலிப்பாக (boring) கருதுவர்
- வேறு சிலர் படித்து ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாததாலும் வசனங்களின்படி வாழ கடினமாக தோன்றுவதாலும் போதுமான ஆர்வம் கொடுக்க மாட்டார்கள்
- பெரும்பாலானோர், அதை வாசித்து தியானிப்பதினால் வரும் நன்மைகளை அறியாததினால் ஆர்வம் இல்லாமல் போகிறது
நமக்குள்ளும் இப்படிப்பட்ட காரணங்கள் இருப்பதினால் வேதத்தை வாசிக்காமல் நாட்களை கழிக்கிறோம். படித்த பிடித்த சின்ன அதிகாரங்களையே திரும்பத்திரும்ப வாசிக்கிறோம்.
நாம் வேதத்தை வாசிக்க வேண்டும் என்றால் அதற்கான நேசம் மிகவும் அவசியம். ஏனென் -றால் ஒரு காரியத்தை நேசம் இல்லாமல் செய்யும் போது அது நமக்கு பாரமாகவே தோன்றும். ஆக, அந்த நேசத்தை நாம் எப்படி வளர்த்துக்கொள்வது.
கீழே கொடுக்கப்பட்ட சில அணுகுமுறை மாற்றங்கள் நாம் வேதத்தை நேசிக்க மிகவும் உதவும்-
- ஒவ்வொரு நாளும் வேதத்தை கையிலெடுக்கும் போது, ‘இன்றைக்கு குறைந்தபட்சம் ஒரு காரியமாவது வேதத்திலிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் ‘ என்ற எண்ணத்தோடு படிக்க வேண்டும்
- நாம் ஆராதிக்கின்ற தேவனை அறிந்து கொள்ள வேண்டும் ( தேவனை அறிகிற அறிவில் வளர வேண்டும்) என்பதே நம் முக்கிய நோக்கமாக இருக்கட்டும்
- தேவனிடமிருந்து வந்த தனிப்பட்ட கடிதமாக, நம்முடன் பேசும் புத்தகமாக பாவிக்கும் போது சுவாரசியமாக இருக்கும்.
- பல அதிகாரங்கள் படித்து மனதில் ஒன்றும் இல்லாமல் இருப்பதும் அல்லது இன்றைக்கு கடமையை முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு படிக்காமல் தரத்துடனும் கருத்துடனும் வாசிப்பதே சாலச்சிறந்தது. மிகவும் பயனுள்ளது.
- பரலோகத்திற்கு செல்ல நாம் எப்படி தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்வது என்ற வழிகாட்டியாகவே (guide) வேதம் விளங்குகிறது என்பதை நாம் உள்ளத்தின் ஆழத்தில் பதிய வைக்க வேண்டும்
- ஒரு மனைவி,கணவன், பெற்றோர், பிள்ளைகள், வேலைக்காரன், எஜமான், ராஜா, ஊழியக்காரன் எப்படி வாழ வேண்டும் என்ற மாதிரியை வேதம் நமக்கு கொடுக்கிறது, நம் குணாதிசயங்களை மாற்ற வல்லமை கொண்டதாயும் இருக்கிறது
- அன்றாட வாழ்க்கைக்குரிய எல்லா விடைகளும், சிறந்த முறையில் வாழ தேவையான ஞானமும், கவலைப்படும் போது தேவையான ஆறுதலும் வேதத்தில் உள்ளது என்பதை நான் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்
- எல்லாவற்றிற்கும் மேலாக வேதத்தை வாசித்து தியானிப்பதன் முக்கியத்துவத்தையும், அவைகளுக்கு கீழ்படிவதால் வரும் ஆசீர்வாதங்களையும் நாம் அறிந்து கொள்ளும்போது வேதத்தின்மேல் இருக்கும் பற்று தானாக வரும்.
அடுத்த பதிவில், தாவீது வேதத்தை நேசித்து தன்னை எப்படி விழாமல் காத்துக் கொண்டான் என்பதை தியானிப்போம்.
– தொடரும்