முந்தைய வலைப்பதிவில் உபவாச பழக்கம் நம்மை எப்படி விழாமல் காக்கும் என்பதை தியானித்தோம் . இந்த இரண்டாம் பாகத்திலும், தேவனை நமக்கு முன் நிறுத்துவது நம்மை எப்படி காக்கும் என்பதை தியானிப்போம்!
பெல்ட் எண் # 2. தேவனை எப்போதும் நமக்கு முன் வைப்பது
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
சங்கீதம் 16: 8
இவ்வசனத்தை பொறுமையுடன் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் தாவீது தேவன் மீது கொண்டுள்ள வலுமையான அசைவில்லா நம்பிக்கையும், தேவனோடுள்ள அவரின் உறவும், அவர் தேவனை அறிந்த விதமும் நம்மைத் திகைக்க வைக்கிறது அல்லவா!
மற்ற மொழிபெயர்ப்பு, ‘தேவனுடைய பிரசன்னம் எப்பொழுதும் என்னோடு இருப்பதை நான் அறிவேன். அவர் எப்போதும் என் வலது பக்கத்தில் இருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை‘ என்பதாக கூறுகிறது. தேவ பிரசன்னம் எப்போதும் அவரை சூழ்ந்து இருக்கிறது என்ற விழிப்புணர்வு அவரது வெற்றி வாழ்க்கைக்கு ஒரு திறவு கோலும், ‘என் இதயத்திற்கு ஏற்றவன்’ என்ற தேவனின் சான்றையும் பெற ஒரு காரணமாக அமைகிறது.
சரி, தேவன் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார் என்ற விழிப்புணர்வினால் பலன் என்ன?
- தேவனுக்கே முன்னுரிமை அளிக்கிறோம், நாம் செய்யும் ஒவ்வொன்றிலும் அவருடைய கருத்து என்ன என்பதை முன்வைக்கிறோம்
- நம் நினைவுகள் எப்பொழுதும் அவரை சுற்றியே இருக்கின்றது
- நம் இதயத்தில் எப்போதும் அவரோடு உறவாடி கொண்டிருக்கிறோம்
- எப்போதும் உண்மையாகவும், தாழ்மையாகவும், நம் செய்கைகளை சீராகவும் வைக்க பிரயாசப் படுகிறோம்
- நம் ஒவ்வொரு பேச்சிலும் செய்கையிலும் அவரை பிரியப்படுத்தவும், அவரைத் துக்கப்படுத்தி விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் அவரின் பிரசன்னத்தை காத்துக் கொள்ளவும் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்
- ஏதோ ஒன்றில் அவருடைய சித்தத்தில் இருந்து விலகி விட்டோம் என்று உணரும்போது உடனடியாக அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம்
மிகவும் எளிதான முறையில் கூறவேண்டுமானால், நம் வீட்டிற்கு நம் நாட்டு பிரதம மந்திரியோ அல்லது பிரபலமான தேவ மனுஷனோ குறிப்பிட்ட நாட்கள் தங்குவார் என்றால் நம் பேச்சும் நடத்தையும் சிந்தனையும் எவ்வளவு மாற்றத்தை அடையும். அதைக் காட்டிலும், இந்த உலகத்தையே படைத்த தேவாதி தேவனும், நம்மை உருவாக்கி படைத்து ரட்சித்து அன்புக் கூறுகிற ஆண்டவர் நம்மோடு கூட எப்போதும் இருக்கிறார் என்ற உணர்வு நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகமே இல்லை!
தாயின் அரவணைப்பிலும், தகப்பனின் கட்டுப்பாட்டிலும் பிரியமாய் நடக்கின்ற ஒரு பிள்ளை தவறிப் போகாதது போல தேவனுடைய பிரசன்னத்தை சார்ந்து வாழ்ந்து, அவருக்கே முக்கியத்துவம் கொடுக்கும் நம்மையும் அவர் விழாமல் காத்துக் கொள்வார். ‘நாம் வலதுபுறம் இடதுபுறம் சாயும் பொழுது, வழி இதுவே !இதில் நட’ என்ற சத்தத்தை கேட்க உதவி செய்வார். அவர் எப்போதும் நம் வலதுபக்கத்தில் இருப்பதனால் நம்மை கைவிடவும் மாட்டார் விட்டு விலகவும் மாட்டார். அவர் ஆலோசனை எப்போதும் நமக்கு உண்டு. என் கால்கள் சறுக்குகிறது என்று சொல்லும்போது அவருடைய கிருபை நம்மை தாங்கும். நமக்கு நிச்சயமான உதவி அதுவே!