கர்த்தராகிய நானே … இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்
எரேமியா 17:10
உங்களுக்கு நாளை டெஸ்ட் என்றால் எத்தனை பேர் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வீர்கள்?
கல்வித்துறையானாலும் உடல் பரிசோதனை ஆனாலும் ‘டெஸ்ட்’ என்று வரும்பொழுது நம்மில் அநேகருக்கு பதட்டமும் பயமும் உண்டாகிறது அல்லவா?
சில வேளைகளில் , நானும் என் பிள்ளைகளின் குணநலன்களை கண்டரிய அவர்களை சோதிப்பதுண்டு. என் இனிய மகள் சாக்லேட் சாப்பிட ஆசைப்படுகையில், அவள் கேட்டதைவிட கூடுதல் பணம் கொடுத்து தன் அண்ணணுக்கும் வாங்கி வருவாளா என்று பார்ப்பேன்.இவ்வாறு அவளின் உண்மையான அன்பை சோதித்து அறிந்து கொள்வேன்.
மற்ற சோதனை கூறுகளைத் தவிர, உலக ஆசீர்வாதம், பணம், புகழ் போன்றவற்றால் தேவன் நம் குணத்தை சோதிப்பார் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை யூதா ராஜாவான எசேக்கியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். வேத புத்தகத்தில், அவருடைய வரலாறு மூன்று வெவ்வேறு புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதால்(ராஜாக்கள், நாளாகமம், ஏசாயா) அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
‘பலருக்கு தங்கள் கடினமான சூழ்நிலையை கையாள தெரியும், ஆனால் ஒரு சில சதவீதம் மட்டுமே தங்கள் வெற்றியை நன்றாக கையாளுவர்’
உத்தம ராஜாவாகிய எசேக்கியா எதிரிகளின் சீற்றுதலிலும், உயிருக்கு ஆபத்தான தருணத்திலும், வியாதியிலும் தேவனையே சார்ந்திருந்து ஆலயத்தையும், தேவ மனுஷனின் (ஏசாயா) ஐக்கியத்தையும் விடாதிருந்தார். தேவனைத் தேடி அவரையே நம்பி தனது தாழ்ந்த நிலையில் உறுதியாக இருந்தார். ஆனால் இவை எசேக்கியாவை சோதிக்க தேவன் தேர்ந்தெடுத்த நேரம் அல்ல. எதிர் மாறாக,இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவர் மீண்டு வந்த பிறகும், அவரை சுற்றி எல்லாம் சமாதானமாய் இருக்கையிலும் அவரை சோதித்தார்.
அவர் தன் வாழ்க்கையின் பள்ளத்தாக்கைக் கடக்கும்போது, அவருடைய கண்கள் பெருமையினால் மூடப்பட்டது .
எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்(2 நாளாகமம் 32:25).அதே விதமாக, சில விசுவாசிகள் கூட தங்கள் கடின சூழ்நிலையில் தேவனையே அண்டி கொண்டிருப்பர்.தாழ்மை உள்ளவர்களாய் இருந்து மனுஷர் படும் வேதனைகளை புரிந்துகொள்வர்.ஆனால் ஆசீர்வாதமான காலகட்டத்தில் அவர்களின் இருதயம் மேட்டிமையாகி,மற்றவர்களைப் பார்க்கும் விதமும் நியாயம் தீர்க்கும் விதமும் வியத்தகு முறையில் மாறுகிறது. கடின உழைப்பும் திறமைகளும் தாங்கள் மிகவும் ஆவிக்குரியவன் என்பதாலும் தான் ஆசிர்வாதங்களுக்கு தகுதியானவர்கள் என்பதை அவர்கள் பேச்சும் செயலும் வெளிப்படுத்துகிறது.
‘அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.
2 நாளாகமம் 32:31.
சோதனை நேரங்களில் தேவன் அவரை ஏன் கைவிட வேண்டும்?
இவ்வசனத்தில், ‘தேவன் அவனை கைவிட்டார்’ என்ற சொற்றொடர், தேவன் என்றென்றும் கைவிட்டார் என்று அர்த்தமல்ல.மாறாக, நம்முடைய இருதயத்தின் நிலையை நமக்குத் தெரியப்படுத்தவும், நாமே அறிந்து கொள்ளவும், நம் எதிர் செயலைப் (reaction ஐ) புரிந்து கொள்ளவும் அவர் அமைதியாக இருந்து நம்மை கவனிப்பார். அந்நேரத்தில் அவருடைய அறிவுறுத்தலையும் தூண்டுதலையும் பிரசன்னத்தையும் நம்மால் உணர முடியாது.ஆனால் எச்சூழ்நிலையிலும் தேவன் நம்மோடு தான் இருக்கிறார்.
ஒரு பிரபலமான போதகர் கூறுகிறார் ‘தேவனின் பல்கலைக்கழகத்தில் இரட்டை பதவி உயர்வு(Double promotion) இல்லை. எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகுப்பிலும் அமர வேண்டும்’. தேவனால் நடத்தப்பட சோதனைகளுக்கு ஒருவருக்காகிலும் விலக்கில்லை.
அவர் சோதிப்பதற்கான முக்கிய காரணம் நம்மை நிரூபித்து உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதுமாகும். அவருடைய நோக்கம் நம்மை விழச் செய்ய அல்ல. நம் சொந்த இருதய நிலையை வெளிப்படுத்தி , மனம் திரும்புவதற்கே ஆகும்.
நம் உரையாடல்கள், நோக்கங்கள்,செயல்கள்,நடத்தைகள் ஆகியவற்றை நாமே அவ்வப்போது பரிசோதிக்கும் போது சோதனை யார் மூலமாக வந்தாலும் அதிலே விழாதபடி நம்மை காத்துக் கொள்ளலாம்.
எனவே, எல்லா வாழ்க்கையின் பருவத்திலும் தடுமாறாமல் இருப்பதற்கான எளிய வழிகள் – அடுத்த பதிவில்.